செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்கு பதிவு தென்காசி:செங்கோட்டையில் வீரவாஞ்சி திடலில் ஆர்எஸ்எஸ் 98வது ஆண்டு விழா, வள்ளலாரின் 200வது ஆண்டு நிறைவு மற்றும் மகாவீரரின் 2,550 ஆண்டு விழாவை முன்னிட்டு சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம்(ஆர்.எஸ்.எஸ்) சார்பில் சமுதாய நல்லிணக்க ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
செங்கோட்டை மேலரத வீதியில் துவங்கிய அணிவகுப்பு கீழ ரதவீதி காவல் நிலையம், தாலூகா அலுவலகம் வழியாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நிகழ்வில் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த பேரணியின் போது காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி கோஷம் எழுப்பியதாக பேரணியில் கலந்து கொண்ட 228 பேர் மீது தென்காசி மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பகையை தூண்டுவது, அனுமதியின்றி கருத்துக்களை வெளிப்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அனுமதியின்றி பதாகைகளை ஒட்டியதாகவும் செங்கோட்டை துணை வட்டாச்சியர் ராஜாமணி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “இது என்கவுண்டர் இல்லை..தற்காப்பு” - ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் குறித்து திருச்சி எஸ்பி விளக்கம்!