தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று முதல் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவச பொருள்கள் தவிர மற்ற அனைத்தையும் திறக்க அரசு அனுமதியளிக்கவில்லை. மது கடைகள் மூடப்பட்டதால் ஆங்காங்கே மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகிறது.
வீட்டில் பதுக்கி மது விற்பனை: 197 பாட்டில்கள் பறிமுதல்!
தென்காசி: வீட்டில் வைத்து மது விற்பனை செய்த ஒருவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் இருந்து சுமார் 197 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஊத்துமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள சோலைசேரி உள்ளிட்ட பகுதிகளில், சிலர் சட்டத்திற்குப் புறம்பாக மது பாட்டில்களை வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முற்பட்டதாக ஊத்துமலை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஊத்துமலை காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான காவல் துறையினர் சோலை சேரியில் சிவனையா (60) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, பெட்டி பெட்டியாக சுமார் 197 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின் காவல் துறையினர் சிவனையாவை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.