தென்காசி:நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தென் தமிழகத்தின் பிரதான சுற்றுலா தளமாக விளங்கும் இடம் குற்றாலம். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் காலமாகக் கருதப்படுகிறது. அச்சமயத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்வதன் காரணமாகக் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகக் காணப்படும்.
குற்றாலம் பகுதியில் அதிக அளவில் இருக்கும் தங்கும் விடுதிகளில், பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தங்கி, குற்றால சீனனை ரசித்துச் செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது சில காலமாகக் குற்றாலத்தில் சீசன் சரியான நிலையில் தொடங்காமல், வறட்சியான நிலை காணப்படுகிறது.
இருப்பினும், அவ்வப்பொழுது பெய்யும் மழையால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் தண்ணீர் வரத்து சிறிதளவு இருக்கின்றது. இதனால் வழக்கமான சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாவிட்டாலும், அண்டை மாவட்டங்களிலிருந்து ஓரளவுக்கு பயணிகளின் வருகை உள்ளது.