இந்து முன்னணியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! தென்காசி: சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் பகுதியில் ஏழை மாணவர்களுக்காக அரசுப் பள்ளி அமைத்திட கோரிக்கை வைத்த இந்து முன்னணியினர், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், போலீசார் தரப்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தும் கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அனுமதி மறுத்த நிலையிலும் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால், போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கு கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்தி முன்னணியினரை கலைந்து செல்ல போலீசார் வலுயுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு உடன்படாததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிய போலீசார், பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இழுத்துச் சென்றபோது, சங்கரன்கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பெரும் பரபரப்பும் நிலவியது.
இதையும் படிங்க: “காவிரி நீரை பெற்றுத் தர வேண்டுமென தமிழக அரசு நினைக்கவில்லை” - சீமான்