தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு இடங்களில் முறைப்படி ஒப்பந்தம் கோரப்படாமல் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இப்பணிகள் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பில் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒப்பந்தம் கோரப்படாமல் எப்படி பணிகள் நடக்கின்றன, இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் குறிப்பாக சங்கரன்கோவில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள சின்ன ஒப்பனையாள்புரம், அக்கரைபட்டி ஆகிய இரண்டு ஊர்களிலும் ஒப்பந்தம் விடப்படாமல் பாலம் கட்டும் பணி நடைபெற்றுள்ளது.