மதுரை:மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம் உள்ளிட்ட எண்ணற்ற அருவிகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிகளை சிலர் வணிக நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை தடுத்து தங்கள் ரெசார்ட்டுக்கு வரும் வகையில் மாற்றியமைத்திருப்பதாக புகைப்பட ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். இவர்களின் செயலால், இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இயற்கை அருவிகளின், நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது என கண்டனம் தெரிவித்தனர்.
2 நாட்களுக்குள் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயமுத்தூர், ஊட்டி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இக்குழு ஆய்வில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் இக்குழு செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.