தென்காசி:தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்து எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தென்காசியில் நேற்று (நவ 5) இரவு சுமார் 8 மணிக்கு மேல் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது.
தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழை…வாகன ஓட்டிகள் அவதி! மாலை 4 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 11 மணி வரை நீடித்ததால் தென்காசி பிரதான சாலைகளில் உள்ள சாக்கடை வடிகால் நிறைந்து சாலையில் மழை நீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தென்காசி சுவாமி சன்னதி பஜார், அனைக்கரை தெரு, நடுபல்க், தெப்பக்குளம் தென்காசி மேம்பாலம் மற்றும் அந்த பகுதியாக வாகனங்கள் இரவு நேரங்களில் அதிகமாக செல்லக்கூடிய பகுதியாகும். இந்த பகுதிகளில் அதிகப்படியாக கனமழை பெய்ததால் மேம்பாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் சாலைகளில் அதிகப்படியாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தண்ணீரில் செல்லும் பொழுது பெரும் சிரமத்திற்கு உள்ளானது. இத்தனை ஆண்டுகளில் தென்காசியில் முதன்முறையாக வரலாறு காணாத கனமழை பெய்ததுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், தென்காசியில் உள்ள அனைத்து சாலைகளும் நீரில் மூழ்கி காணப்பட்டது. மழை நீரில் சாக்கடை நீர் கலந்ததால் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கினால் சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்.
கடந்த வருடங்களில் இதுவரை தென்காசியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு மழை பெய்தது இல்லை எனவும் தற்போது ஏற்பட்ட மழை வரலாறு காணாத மழை என்று மக்கள் கூறுகின்றனர். கனமழையின் போது சாக்கடை வடிகால் நீர், மழை நீரில் கலப்பதை தடுக்கும் வண்ணம் வடிகால் சுவர்களை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு! 4வது நாளாக குளிக்க தடை!