தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடக்கோரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட தொழிற்சங்க மாவட்ட குழுவினர் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர்.
முன்னதாக 50-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தங்களது கோரிக்கைகளை கண்டன கோஷம் எழுப்ப தயாராகி இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் நாட்டில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம், கண்டன கோஷம் எதுவும் நடத்த அனுமதி இல்லை, தற்போது மாவட்ட ஆட்சியர் முதலமைச்சருடன் ஆலோசனையில் உள்ளார். எனவே தொழிற்சங்க நிர்வாகிகள் 5 பேர் மட்டும் வந்து மனு அளித்து விட்டு செல்லும்படி கூறினர். இதையடுத்து நிர்வாகிகள் 5 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உதவியாளரிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.