தென்காசி:மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், குண்டாறு அணை, தனது முழு கொள்ளளவை எட்டி, நீர் நிரம்பி வழியத் துவங்கியுள்ளது.
தொடர் மழை:மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு சீராக நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
முழு கொள்ளளவை எட்டிய குண்டாறு அணை:அந்த வகையில், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட குண்டாறு பகுதியில் உள்ள குண்டாறு அணையானது, தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36 அடியை எட்டிய நிலையில், அணை நிரம்பி, நீர் வழிய துவங்கியுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதமும், தனது முழு கொள்ளளவை எட்டி, குண்டாறு அணை நீர் நிரம்பி வழிந்தோடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடந்த அதிமுகவை பாஜக தான் ஒன்று சேர்த்தது" - எச்.ராஜா அதிரடி
எழில்மிகு காட்சி:இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக குண்டாறு அணை, தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடும் சூழலில், இந்த அணையை நம்பி விவசாயம் செய்யும் ஏராளமான விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குண்டாறு அணை நிரம்பி, அணை நீர் வழிந்தோடும் எழில்மிகு காட்சியை காண்பதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வருகின்றனர். உள்ளூர்வாசிகளும் நீரில் விளையாடி மகிழ்கின்றனர்.
சுற்றுலாத்தலம்:பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய குற்றாலம் நீர்வீழ்ச்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள், குண்டாறு அணை பகுதியையும், கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் குண்டாறு அணை பகுதியும் அருமையான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. மேலும் குண்டாறு அணை பகுதியில் உள்ள விளையாட்டு பகுதியை மேம்படுத்தவும், இந்தப் பகுதியை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குண்டாறு அணை நீர் நிரம்பி வழியும் காணொலி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:தென்காசியில் ஆடல், பாடலுடன் ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு!