ஓய்வு பெற்ற டிஎஸ்பி பண்ணையிலிருந்து 4 டன் போதை பொருள்கள் பறிமுதல்
தென்காசி: ஆலங்குளம் அருகே ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியாயத்திலிருந்து ஆண்டிபட்டி செல்லும் வழியில் ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் - கோழிப் பண்ணை உள்ளது. இவர் சென்னையில் வசித்துவரும் நிலையில், தோட்டம் - கோழிப் பண்ணையை அவரது இரண்டாவது மகன் ஜெயக்குமார் என்பவர் நிர்வகித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கோழிப்பண்ணையில் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருள்கள் ஆகியவை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும், முக்கிய புள்ளிகள் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா என விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்கள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.