தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் காலத்தில் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களுக்காக தனி சந்தை உருவாக்கப்படும் - ஆளுநர் ஆர்.என்.ரவி - Governor RN Ravi speech in Tamil

Governor RN Ravi speech in Tenkasi: குற்றாலத்தில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 10:01 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தென்காசி:இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தென்காசி அடுத்த குற்றாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை தமிழ் மொழியில் துவங்கி, நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள விவசாயிகளை வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, "இந்த நாள் எனக்கு சந்தோஷமான நாள். இந்த இடம் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய இடம். வடக்கே காசி இருப்பதுபோல் தெற்கே தென்காசி உள்ளது. பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கிய மண் இது.

என்னை உங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும், கவர்னராகவும்தான் தெரியும். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன்தான். 11 மற்றும் 12ஆம் வகுப்பில் படிக்கும் காலத்தில் இருந்து விவசாயப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன். அதனால் எனக்கு விவசாயிகளை பார்க்கும்போது தனி மரியாதையும் மற்றும் பிடித்தமும் தோன்றும்.

விவசாயப் பணி என்பது கடினமானது. விவசாயிகளின் வாழ்க்கை என்பது அதிகமான மேடு பள்ளங்களைக் கொண்டது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற பலர், தற்போது இயற்கை விவசாயம் செய்து வருவது பாராட்டத்தக்கது. இயற்கை விவசாயத்தின் மூலம் வேதிப்பொருட்கள் இல்லாத, உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய உணவுப் பொருட்களை நாம் உற்பத்தி செய்யலாம்.

காலநிலை மாறுபாட்டின் காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் ஒரு சில வருடங்களில் பல நாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்படும். நமது நாடு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. உலகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ள நமது நாட்டின் உந்து சக்தி விவசாயிகளாகிய நீங்கள்தான்" என்று கூறினார்.

மேலும், "பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய 'லைஃப்' என்ற திட்டம் ஐ.நா சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் நாம் வாழ்க்கையை எவ்வாறு நகர்த்துகிறோம்? இயற்கை சக்தியை எவ்வாறு உற்பத்தி செய்கிறோம்? எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என்பதையெல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த ஜி20 மாநாட்டில் இந்த திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த திட்டத்தினை உலகத் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, வரவேற்றுள்ளார்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஆயிரக்கணக்கான வருடங்கள் நாம் விவசாயம் செய்து வருகிறோம். நமது நாட்டின் சொத்து விவசாயிகள்தான். இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தால், நல்ல லாபத்தை பெற முடியும். இயற்கை வேளாண்மை மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆகவே, சந்தைப்படுத்துதல் முறையை நாம் தெளிவாக கற்று, அதன் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்தால், கனிசமான லாபத்தை பெற முடியும். வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தனியாக சந்தை உருவாக்கப்படும். அந்த காலக்கட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details