தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் யானை, மிளா மான், காட்டெருமை உள்ளிட்டவை அதிகமாக உள்ளது.
அப்பகுதியில் வனச்சரக பணியாளர்களின் ரோந்துப்பணியின்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை, வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தலையணை அருவியில் நோய் வாய்ப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதன்பிறகு திருநெல்வேலி மாவட்ட வன அலுவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவில் நேற்று (நவ.20) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் மனோகரன் அவர்களது குழு, திருநெல்வேலி கால்நடை மருத்துவகல்லூரி துறை தலைவர் மருத்துவர் முத்துகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், உதவி மருத்துவர் கருப்பையா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் முதல்கட்ட மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டனர்.