சிற்றருவிக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது தென்காசி:குற்றாலத்தில் தற்பொழுது அனைத்து அருவி பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகிறது. மேலும் குற்றாலம், பழைய குற்றாலம், புலி அருவி, மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
மேலும், விடுமுறை தினம் மற்றும் விழாக் காலங்கள் போன்ற முக்கிய நாள்களில் குற்றாலம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. குற்றாலம் பகுதியில் ஒரு சில பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் போக முடியாத சூழ்நிலை உள்ளது.
குறிப்பாக செண்பகாதேவி அருவி, தேனருவி மற்றும் சிற்றருவி போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிகப்படியாகச் செல்வது கிடையாது. இந்த அருவிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் வனப்பகுதியின் அனுமதி பெற்று வனப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்புடன் மேலே நடந்து செல்ல வேண்டும்.
தற்பொழுது செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு வனத்துறையால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிக அழகான நீர்வீழ்ச்சியான சிற்றருவிக்குப் பொதுமக்கள் செல்ல வனத்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சிற்றருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால் பெரியோர் முதற்கொண்டு வாலிபர்கள் சிறியவர்கள் என ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று சிற்றருவி மூலிகை தண்ணீரில் குளிக்கின்றனர். மேலும் வனத்துறையின் மூலமாக இந்த சிற்றருவிக்குச் செல்வதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சிற்றருவிக்குச் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான கண்ணைக் கவரும் கவர்ச்சிகரமான வாசகங்களுடன் வனத்துறையினர் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளனர். இயற்கை சூழ்நிலைகளை எவ்வாறாகப் பாதுகாக்க வேண்டும், இயற்கையை நம் எவ்வாறாக மதிக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டு என பல்வேறு விதமான வாசகங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மலையின் மேல் பகுதிக்கு நடந்து செல்ல வருபவர்களுக்கு வனத்துறை மூலமாக உரியப் பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இங்கே ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் குளிப்பதற்கும் தனித்தனியான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிற்றருவி முழுமையான மூலிகை தண்ணீராகக் காணப்படுவதால் இங்குக் குளிப்பதன் மூலமாக பல்வேறு விதமான நோய்கள் தீர்க்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டங்களுடன் அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மட்டுமல்லாமல் சிற்றருவிகளிலும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட நெடிய தூரம் என்றும் கருதாமல் சிற்றருவிக்குச் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Tomato Theft: "எங்க டார்கெட் தக்காளிதான்": 400 கிலோ தக்காளியோடு எஸ்கேப்பான திருடர்கள்!