தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடையநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்நிலை பாதிப்படைந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சுற்றுலாப்பகுதிகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.