தென்காசி:தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இந்த முறை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தது. இதற்கு சாட்சியாக நேற்று(அக்.12) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பல இளைஞர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், வெற்றி பெற்று இளம் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
அதாவது வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட லட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ரவி சுப்பிரமணியன் - சாந்தி தம்பதியின் மகள் ஸாருகலா (23).
விவசாயத்தொழில் செய்து வருபவர், ரவிசுப்ரமணியன். கடந்த 2011ஆம் ஆண்டு வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த முறை வெங்கடாம்பட்டி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இவர் தனது மகளை தேர்தல் களத்தில் போட்டியிட வைத்தார்.
தந்தையின் முந்தைய தேர்தல் அனுபவத்தை மட்டுமே நம்பி, களமிறங்கிய ஸாருகலா பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தல் நேரத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை பெற்றுவந்த சூழலில், இறுதியாக இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்துவடிவை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.