தென்காசி: கீழப்பாவூர் அடுத்த குருங்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். இவர் தனது 20ஆவது வயதில் திருநங்கையாக மாறியுள்ளார். எனவே, தனது பெயரை திருமலை ராணி நாச்சியார் என மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது இவருக்கு 31 வயது ஆகிறது. திருநங்கையாக மாறியதால் சமுதாயத்திலும் குடும்பத்திலும் பல்வேறு அவமானங்களை சந்தித்த திருமலை ராணி நாச்சியார் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
மேலும் சக திருநங்கைகள்போல் சாலைகளில் பேருந்துகளில் பொதுமக்களிடம் கை நீட்டி பணம் வசூலிப்பதை விரும்பாத இவர், சிறுவயது முதலே தனக்குத் தெரிந்த வில்லுப்பாட்டு கலையில் சாதிக்கத் துடித்துள்ளார். அதன்படி திருமலை ராணி நாச்சியார் தனது 12 வயது முதலே கோயில்களில் முளைப்பாரி பாட்டு, தெம்மாங்கு பாட்டுப் பாடுதல் போன்ற திறமைகளை வளர்த்து வந்துள்ளார்.
வில்லுப்பாட்டு அரங்கேற்றம்: பின்னர் 20 வயதில் திருநங்கையாக மாறிய கையோடு தென் தமிழ்நாட்டின் பிரபல வில்லுப்பாட்டு கலைஞரான பண்பொழி மாரியம்மாளிடம் முறைப்படி வில்லுப்பாட்டு கற்றுக்கொண்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளில் தற்போதுவரை திருமலை ராணி நாச்சியார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் வில்லுப்பாட்டு அரங்கேற்றம் செய்துள்ளார்.
தற்போதுள்ள இளைஞர்களுக்கு வில்லுப்பாட்டு என்பதை வெறும் பாட்டோடு இல்லாமல் காமெடியான பேச்சுடன் கூடிய தெம்மாங்கு பாடல், உடல் பாவனை ஆகியவற்றையும் விரும்புகிறார்கள். எனவே, அதற்கேற்ப திருமலை ராணி நாச்சியார் வில்லுப்பாட்டுடன் சேர்த்து தெம்மாங்கு பாடல் மற்றும் நகைச்சுவைப்பேச்சு என இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வில்லுப்பாட்டு படிப்பதில் சிறந்து விளங்கி வருகிறார்.
டாக்டர் பட்டம்:எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கோயில் நிர்வாகிகள் இவரை விரும்பி அழைக்கின்றனர். இவரது திறமையைப் பாராட்டி இதுவரை பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 6 விருதுகள் கிடைத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் டெல்லியில் உள்ள நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் திருமலை ராணி நாச்சியாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
மேலும் இதுவரை 23 கோயில்களில் கோல்டு மெடல் வாங்கி அசத்தியுள்ளார். தொடர்ந்து வில்லுப்பாட்டு கலையை அழியவிடாமல் பாதுகாப்பதும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமர் கையால் விருதுகள் வாங்குவதும் தான் தனது ஒரே லட்சியம் என்கிறார், திருமலை ராணி நாச்சியார்.