தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஏராளமான இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளதால், இந்த பகுதியில் தினசரி இரவு மற்றும் பகல் நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணி செல்வது வழக்கம். மேலும் இந்த பகுதி முழுவதுமே யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழக்கூடிய பகுதியாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வேர்புலி வன சரக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பாறையின் நடுவே சிக்கிய சுமார் பதினைந்து வயது யானை உயிரிழந்து கிடப்பதாக ரோந்துப் பணியிலிருந்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட வன மருத்துவக் குழுவுடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். அப்போது பெண் யானை பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாகவே இந்த பகுதி மட்டுமல்லாமல் புளியங்குடி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன. அதில் குறிப்பாக இந்த பகுதியில் யானைகள் அதிக அளவில் நோயின் மூலமாகவும், மழைக்காலங்களில் வழித்தடங்கள் அழிந்து வருவதால் யானைகள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
எனவே வனவிலங்குகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு வனத்துறையை நவீனப்படுத்தி வனத்துறையினருக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தற்போது உள்ள காலத்திற்கு ஏற்ப வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளைக் கொடுத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் இது போன்ற சம்பவங்களில் வனவிலங்குகள் இறக்காமல் இருக்கத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இன்று 15 வயது யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:தென்காசியில் அதிரடி வாகன சோதனை; இரண்டு நாட்களில் 2,781 பேர் மீது வழக்குப் பதிவு!