தென்காசி: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நேற்றிலிருந்து(டிச.17) தென்காசி மாவட்டத்தில் இடைவிடாமல் பரவலாகக் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலிலுள்ள சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியே வெளியேறி வருகின்றன.
இதையடுத்து தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் அருகே துரைச்சாமிபுரம் கிராமத்தில் தொடர் மழை காரணமாகப் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் மற்றும் பயிர்கள் காற்றுக்குச் சாய்ந்தும் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கண்மாயிலிருந்து வெளியேறி வரும் உபரி நீர் அருகிலுள்ள விளைநிலங்களில் சூழ்ந்துள்ளதையடுத்து, விவசாயி ஒருவர் கூறுகையில், "மக்காச்சோள பயிர்கள் நட்டு சுமார் மூன்று மாதங்களே ஆனது. இதனை மாதம் ஒரு முறை களையெடுத்து, உரம் வைத்து குழந்தையைப் பராமரிப்பது போலக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தேன்.