பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர் ஆகாஷ்! வருத்தத்தில் தென்காசி மாவட்ட விவசாயிகள் தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிந்து நான்கு வருடங்கள் ஆகிய நிலையில் நான்காவது ஆட்சியராக ஆகாஷ் (Tenkasi District Collector Akash) பதவி ஏற்றார். இவர், பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து மக்கள் பணிகளில் தொய்வின்றி செயல்பட்டு வந்துள்ளார்.
குறிப்பாக, பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான செயற்கை நீர்வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் எடுத்துக் கூறியவுடன், விவசாயிகளின் குறைகளைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் செயற்கை நீர் வீழ்ச்சிகள் அனைத்தையும் இடிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
விவசாயிகளிடம் இதன்மூலம் நன்மதிப்பைப் பெற்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைச் சிறந்த முறையில் நடத்தி வந்தார். அதன்பின்னர் மாவட்டம் பிரிந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு 'குற்றாலச் சாரல் திருவிழா'வை மாவட்ட திருவிழா என்று மக்கள் கூறும் அளவிற்கு மிகப் பிரமாண்டமாக நடத்தி, சுற்றுலாப் பயணிகள் மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
தொடர்ந்து, பல்வேறு பிரச்னைகள் ஆளுங்கட்சி பிரமுகர்களால் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன. இந்தச் சூழலில், அவற்றை எதையும் கண்டு கொள்ளாமல் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு முடிந்த 8 மணி நேரத்தில் இரவோடு இரவாக கடுமையாகப் பணியாற்றி அதிகாலை 7 மணிக்கு, பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு இடையில் முடிவுகளை வெளியிட்டு அன்றைய தினமே அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அதிரடி காட்டினார். இதன் வாயிலாக, அரசு நேர்மைக்கு உதாரணமாக அரசு அலுவலர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று மாற்றப்பட்ட நிலையில் ஆட்சியர் ஆகாஷ் மாற்றப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தங்களது வருத்தத்தை தெரிவிக்கும் வகையிலும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் தங்களது ஆகாஷ் அவர்களை நினைவுகூர்ந்து, தங்களது Whatsapp-ல் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளனர். விவசாயிகளும் வீடியோக்கள் வழியாக ஆகாஷ் மாற்றப்பட்டதற்கு தங்களது எதிர்ப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், இதே ஆட்சியர் தங்களுக்கு நீடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் இணைய இருந்தாரா..? சீமான் பேச்சுக்கு ஜோதிமணி கண்டனம்