தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.22) மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயம் சார்ந்த குறைகள் மட்டுமே தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டதால் கொந்தளித்த விவசாயிகள், அனைத்து குறைகளும் கேட்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு உடன்பாடு இல்லாததைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த விவசாயிகள் “இது விவசாயிகள் குறைதீர் கூட்டம். எனவே, விவசாயிகள் கூறும் குறைகளை தீர்க்க வேண்டும். இல்லையெனில், இது விவசாயம் குறைவீர் கூட்டம் என பெயர் மாற்றம் செய்யுங்கள்” என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கட்டுப்பாட்டில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றதாகவும், காவல் துறையினர் அச்சுறுத்தும் வகையில் விவசாயிகள் கோரிக்கைகளை கூற விடாமல் இருந்ததாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.