தென்காசி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். அப்போது அந்த குறைதீர் கூட்டத்தில் நெல்கட்டும்செவல் ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் என்பவரும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவைப் படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். விவசாயி மகேஸ்வரன் அந்த மனுவில், “நான் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி - ஜூன் மாதங்களில் கோடைக்கால பருவத்திலும், செப்டம்பர் - ஜனவரியில் மழைக்காலத்திலும் பயிர் செய்து வருகிறோம்.
இருபருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்கும் கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவை. ஆனால் ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனும் 100 நாட்கள் வேலைக்குக் கிராம மக்கள் அனைவரும் சென்று வருகின்றனர்.
இதனால் பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல் சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலையின் காரணமாக 4 மணி நேரமாகச் சுருங்கி விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு மேலும் அதிகமாகி விட்டதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம்.