தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி மரணம் - காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தென்காசி: விசாரணைக்காக அழைத்துச் சென்ற முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Farmer died during investigation
விவசாயி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகை

By

Published : Jul 23, 2020, 1:04 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து(65). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இதையடுத்து தோட்டத்து பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்காக நேற்று (ஜூலை 22) இரவு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த அணைக்கரை முத்து

இது குறித்து தகவல் அறிந்ததும் முத்துவின் உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டனர். மேலும், வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகவும், அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதில் தொடர்புடைய வன அலுவலர்கள் நேரில் வரவேண்டும், நியாயமான முறையில் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு, உரிய விசாரணை நடைபெற வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகை

இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குளத்தில் வளர்க்கப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details