தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கையை நேசிக்கும் விதமாக கொலு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம்! - கொலு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம்

தென்காசி: இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாமி பொம்மைகளுடன் கொலு அமைத்த குடும்பத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

family-creates-nature-awareness-with-golu-dolls
கொலு

By

Published : Oct 24, 2020, 4:27 PM IST

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி, கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அம்பாளை நினைத்து வழிபடும் பண்டிகை என்பதால் இவ்வழிபாடானது முழுக்க பெண்களுக்கே உரிய பண்டிகையாகக் கருதப்படுகிறது.

இந்தப் பண்டிகை நாள்களில் பெண்கள் வீட்டில் கொலு அமைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து அசத்தியுள்ளனர். இந்த கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சித்தரிக்கும் பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.

அன்றாட நிகழ்வுகளின் கொலு பொம்மைகள்

இந்த கொலு குறித்து சுப்பிரமணியத்தின் உறவினர் பூமணி, ”25 ஆண்டுகளாக கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகிறோம். இந்தாண்டு ஏழு வகையான கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் சப்த லிங்கங்கள், சப்த கன்னிகள், ஏழு மலைகள், ஏழு வகையான திருக்கல்யாணம், ஏழு வகையான வேண்டுதல்கள், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட ஏழுவகை பண்டிகைகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.

கொலு பொம்மைகள்

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்பவைகளும் கிராமத்து பின்னணியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கொலுவை அருகில் உள்ள குழந்தைகள் பார்த்துச் செல்லும் போது இயற்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. அவர்கள் காடுகளைக் குறித்தும், இயற்கையில் உள்ள அற்புதங்கள் குறித்தும் தெரிந்து கொள்கின்றனர்” என்றார்.

இயற்கை நேசிக்கும் விதமாக கொலு

காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் மூலம் வனவிலங்குகள் இயல்பாகவே பாதுகாக்கப்படும். இயற்கையை நேசிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை இந்த கொலு வாயிலாக ஏற்படுத்துவதாக சுப்பிரமணியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாமி பொம்மைகளுடன் கொலு அமைத்த குடும்பத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:களைகட்டிய நவராத்திரி: மந்தமாக இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details