தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. மேலும் கடையம் பகுதியில் இதற்கு முன்னதாக கரடி தாக்கி, மூன்று பேர் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தென்காசி மாவட்டம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் பழைய குற்றாலம் ஆகியப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் தற்போது வரை, கரடி நடமாட்டத்தைத் தடுப்பதற்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
மேலும் குற்றாலம் அருகே புலி அருவி செல்லும் பாதையில் அமைந்துள்ள லட்சுமி கோட்ரஸில் வயதான தம்பதிகள் ஒரு வீட்டில் காவலர்களாகப் பணி செய்து வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அந்த தம்பதியினர் வசித்து வரும் வீட்டில் திடீரென்று கரடி ஒன்று புகுந்துள்ளது. மேலும் அந்த தம்பதியினர், அந்த கரடி அடிக்கடி வீட்டின் வளாகத்தினுள் சுற்றி வருவதால் இரவு மற்றும் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கும் போவதற்கும் பெரிதும் அச்சமாக உள்ளது எனக் கூறுகின்றனர்