தென்காசி: நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருப்பதால் தென்காசி மாவட்டத்தின் முக்கிய பகுதி முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியது; "புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல இடங்களில் 34 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாவட்டத்தில் உள்ள 280 கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 781 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துறையினரின் முயற்சியால் மாவட்டத்தில் போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட சுமார் 10 கோடியே 81 லட்சம் மதிப்புள்ள 22.14.5 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சைபர் கிராம் காவல் நிலையத்தின் மூலம் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக மற்றும் தவற விட்டதாக பெறப்பட்ட புகார் மனுக்களில் ரூ.28 லட்சம் மதிப்பிலான 185 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் உள்ள ஒரு கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 711 ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.