சங்கரன்கோவில்:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை வகித்தார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி திமுக மக்கள் விரதப்போக்கில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும்; குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இதுவரை கொண்டு வரவில்லை எனவும்; நாடாளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் தற்போது முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பொதுமக்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலை செய்தது கண்டிக்கத்தக்க விஷயம் எனவும் அவர் பேசினார். அதேபோல், அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதை தெரிந்துகொண்டே திமுகவினர் பணப்பட்டுவாடா, கொலுசு, குக்கர், வீட்டுக்கு வீடு மளிகை சாமான் உள்ளிட்டவைகளை வழங்கி ஜனநாயக படுகொலை செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், 'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தவர் எனவும்; விலையில்லா அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனவும் புகழாரம் சூட்டினார்.