கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற வீடியோ! தென்காசி: செங்கோட்டை நகர் மன்ற கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தின் போது, செங்கோட்டை நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டுதல், நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்குவது, சிறப்பு சாலை திட்டத்தின் மூலம் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றம் குறித்து உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்காமலே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக சுயேச்சை நகர்மன்ற தலைவி ராமலட்சுமி அறிவித்த சூழலில், அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
திமுக உறுப்பினர்களின் அமளியைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவி ராமலட்சுமி கூட்டத்திலிருந்து வெளியேறி காரில் ஏறி புறப்பட்டு சென்றபோது, நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு உறுப்பினரான பச்சை வேட்டி ராஜா என்பவர் நகர் மன்ற தலைவியின் காரின் முன்பு படுத்து உருண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, திமுக உறுப்பினர்களின் எந்த விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படவில்லை எனவும், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் செங்கோட்டை நகர் மன்றத்தலைவி ஈடுபட்டு வருவதாகவும் கூறி 12-வது வார்டு கவுன்சிலரான பச்சை வேட்டி ராஜா என்பவர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே, அங்கு கூடியிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, நகராட்சி கமிஷனரிடம் தங்களது வார்டு குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது நகராட்சி கமிஷனர் அவரை அழைத்துக் கொண்டு அவரது வார்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
நகராட்சி கூட்டத்தின் போது, நகர்மன்றத்தலைவியை கண்டித்து, திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கழுத்தில் புலிப்பல் டாலர்.. வனத்துறை விசாரணை; உறவினர்கள் போராட்டம்!