தென்காசி: மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி, ரேசனில் வாங்கிய அரிசியை உறவினர் வீட்டிற்கு கொண்டு சென்றபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புளியரை காவல் நிலையத்தினர், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன், விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.
செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்: காயமடைந்த பிரான்சிஸ் அந்தோணி, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தனது தந்தையை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மகள் அபிதா, மருத்துவமனை அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் துறையினரும், குடும்பத்தினரும் நடத்திய நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு கீழே இறங்கிவந்த அபிதாவை பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.