தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.05) மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூர் பகுதியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் ஏற்படும் நிர்வாக முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இயக்குநர் கவுதமன் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “சங்கரன்கோவிலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அனைத்து சமுதாய மக்களும் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் நிர்வாக தலைமையிலுள்ள இரமாதேவி என்பவர் கல்லூரியிலுள்ள மரத்தை வெட்டுவது, இடியும் நிலையில் உள்ள வகுப்பறை கட்டடங்களை இன்றளவும் பயன்படுத்துவது, ஆசிரியர்கள் நியமனத்திற்கு பணம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
மாவட்ட நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும், இல்லையெனில் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி கல்லூரி மாணவர்களை ஒன்றுதிரட்டி கல்லூரி வளாகத்தில் பெரும் திரளான போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இயக்குநர் கவுதமன் தொடர்ந்து பேசிய அவர், “சங்கரன்கோவிலில் உள்ள பாரதி நகர் பகுதியில் 40 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதிக்கு, முறையான பேருந்துகள் இயக்கப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கிராம சபை கூட்டத்தின் நோக்கம், அதிகாரம், தேவை என்னென்ன?