தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் என ஐந்து நகராட்சிப் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ”இந்த தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றத்தால் தென்காசி, கடையநல்லூர்,புளியங்குடி உள்ளிட்ட பல ஊர்களில் மக்களுக்கு அதிக அளவு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதயக் கோளாறு, சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம், சக்கரை வியாதி, சிறுநீரக டயாலிசிஸ் போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனைகளை நாடினால் அரசு மருத்துவர்கள் கரோனா வைரஸைக் காரணம் காட்டி எந்த சிகிச்சையும் அளிக்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறாமல், வீடுகளிலேயே நோயுடன் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.