தென்காசி:புளியங்குடியில் இன்று (செப்.20) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு புளியங்குடி பகுதியில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும், அப்பகுதியிலிருந்து புளியங்குடியில் சுமார் 10க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒவ்வொரு வாகனங்களையும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லப்படும் காவலர் போல வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர், சோதனை செய்து அது குறித்த விபரங்களை தனிப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் செய்யும் ஒரு வேலையை காவலர் பணியில் நியமிக்காத ஒரு இளைஞரை வைத்து வேலை வாங்கியது குறித்து தனிப்பிரிவு காவல் அதிகாரியிடம் கேட்டபொழுது, “இவர் புளியங்குடி காவல் நிலையத்தில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசாக பணிபுரிந்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனிப்பிரிவு காவல் ஆய்வாளரின் இந்த பதிலால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் பட்டாசு வெடிக்க அனுமதித்த நிலையில், புளியங்குடி பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்காததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், புளியங்குடி காவல் ஆய்வாளர் தனித்து செயல்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.