தென்காசி மாவட்டம் குற்றாலத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசன் காலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைத்து அருவிகளிலும் நீராடி புது உற்சாகத்துடன் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொது மக்கள் கூடும் இடமான சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதித்து உள்ளது.
இந்த ஆண்டு சீசனை பொறுத்தவரை திட்டமிட்டபடி ஆரம்ப கட்டத்தில் இருந்து அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து இருந்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ததால் ஒரு சில நாள்கள் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி அனைத்து அருவிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.