தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2022, 8:22 AM IST

ETV Bharat / state

குற்றால சாரல் திருவிழா ‘பொதிகை பெருவிழாவாக’ கோலாகல தொடக்கம்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றால சாரல் திருவிழா, ஒருங்கிணைத்த ‘பொதிகை பெருவிழா’ வாக கோலகலமாக தொடங்கியது.

குற்றால சாரல் திருவிழா ‘பொதிகை பெருவிழா’ வாக கோலாகலமாக தொடங்கியது!
குற்றால சாரல் திருவிழா ‘பொதிகை பெருவிழா’ வாக கோலாகலமாக தொடங்கியது!

தென்காசி:குற்றாலத்தில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வந்த சாரல் திருவிழாவானது, கடந்த மூன்று வருடங்களாக கரோனா பெருந்தொற்றினாலும், மழை இல்லாததாலும் நடத்தபடாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் சாரல் திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்ட மாவட்ட நிர்வாகம், சாரல் திருவிழா, உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா என்று 4 விழாக்களை ஒருங்கிணைத்து ‘பொதிகை பெருவிழா’ என்ற பெயரில் தற்போது நடத்தி வருகிறது.

குற்றாலம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 5) தொடங்கிய பொதிகை பெருவிழாவில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

குற்றால சாரல் திருவிழா ‘பொதிகை பெருவிழா’ வாக கோலாகலமாக தொடங்கியது!

தொடர்ந்து, சாரல் திருவிழாவிற்கான லோகோவை அமைச்சர்கள் வெளியிட்டனர். மேலும் பாரம்பரிய கலைஞர்களுக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கினர்.

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “குற்றாலம் என்றால் பொதிகையும் பொருநையும் ஒருங்கிணைந்த ஒரு இடம். வரலாற்று சிறப்புமிக்க இந்த இயற்கை வளம் கொஞ்சும் இந்த இடத்தில் நடக்கின்ற விழாவில் பங்கேற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வரும் சூழலில், தமிழ்நாடே குற்றாலம் போல் வளம் மிகுந்து காணப்படுகிறது. மென்மேலும் தமிழ்நாடு இதேபோல் வளர்ச்சி அடையும்” என பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “இயற்கை வளம் பொருந்திய இந்த குற்றாலத்தில் முன்பெல்லாம் சாரலே இல்லாமல் சாரல் திருவிழா நடந்துள்ளது. ஆனால் தற்போது அருவிகளில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில் இந்த சாரல் விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மிகச்சிறிய அறையில் தற்போது நடந்து வரும் இந்த சாரல் விழாவானது, அடுத்த வருடம் பெரிய அளவில் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தற்போது குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

ஆகவே, உரிய பாதுகாப்புடன் பயணிகள் குளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் என என் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:குற்றால அருவிகளில் கடும்வெள்ளப்பெருக்கு; 4ஆவது நாளாக இன்றும் குளிப்பதற்குத்தடை!

ABOUT THE AUTHOR

...view details