தென்காசி: இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளத்தைச் சேர்ந்தவர், வினித். இவர் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கிருத்திகா வீட்டார் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வினித்துடன் இருந்த கிருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் வினித் அளித்த புகாரின் பேரில், கிருத்திகாவின் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கிருத்திகாவுக்கு குஜராத்தில் வைத்து அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அது மட்டுமல்லாமல், தான் பெற்றோரின் சம்மதத்துடன் மட்டுமே வினித்தை விட்டு வெளியேறி வந்ததாக ஒரு வீடியோவையும் கிருத்திகா வெளியிட்டார்.
இவ்வாறு நாளுக்கு நாள் பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்த இந்த விவகாரம், வினித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் வந்து நின்றது. வினித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகா, தான் பெற்றோர் உடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்திருந்தது.