சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டு, பள்ளிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. கரோனா தாக்கத்தை அறிந்த தமிழ்நாடு அரசு முதலில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி அவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியது. மேலும் இந்த விடுமுறை ஊரை சுற்ற பயன்படுத்தாமல் கரோனா வைரசை விரட்ட வீட்டில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே விடுமுறை நாள்களில் குழந்தைகளை சமாளிப்பது சவால் என்றே பெற்றோர்கள் கருதுகின்றனர். இப்போது சமூக விலகல் அவசியம் என்பது குழந்தைகளுக்கு புரியாத ஒன்று. இருப்பினும் வெளியே செல்லக் கூடாது என பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போன்களையும், தொலைக்காட்சியையும் ஒப்படைத்துவிட்டு நிம்மதியடைகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மாற்றும் வகையில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளை அவரவர் வீட்டில் வைத்தே ஓவிய பயிற்சி அளித்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே தெற்குபஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர். இவர் 10 வருடங்களாக ஓவிய ஆசிரியராக உள்ளார். இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ள அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் வெளியே வரக்கூடாது என்பதாலும் சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருப்பதாலும் அவரவர் வீட்டில் முடங்கி நேரத்தை வீணடித்து வருகின்றனர்.
எனவே, தன்னிடம் ஒவியம் கற்றுக்கொள்ளும் மாணவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் முயற்சியில் இவர் இறங்கியிருக்கிறார்.