தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இத்தொற்றின் நோய் பரவல் மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போது ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றால அருவிகளில் குளிப்பதற்குத் தடை இன்றளவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப்.21) மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில் "தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும் தொடர்ந்து சாரல் மழையின் காரணமாகவும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி சுற்றுலா தலங்கள், பூங்கா, நீச்சல் குளங்கள் தடை உத்தரவு உள்ளது. அந்தவகையில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க தடை உத்தரவு தொடர்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.