தென்காசி: மணிப்பூரில் நடந்த வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று தென்காசி மாவட்டம் பகுதியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். அப்போது திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தின் போது திமுக தொண்டர்களுக்கும், தென்காசி மாவட்டச் செயலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார். அப்போது குறுக்கிட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி தென்காசியில் திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தாங்கள் மணிப்பூர் சம்பவத்தை குறித்து பேச வேண்டாம் எனவும் மாவட்ட கழக செயலாளருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மகளிர் அணியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட கழக செயலாளர் ஆர்பாட்டத்திற்கு எதிராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:‘மணிப்பூர் மக்களின் மனதை மத்திய, மாநில அரசுகள் புண்படுத்திக் கொண்டே இருக்கிறது’ - கனிமொழி கண்டனம்