தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் ஆடல், பாடலுடன் ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு! - ஃபர்ஹத் சுல்தானா

Community baby shower: தென்காசியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் சார்பாக, ஊர் மேல் அழகியான் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா விழிப்புணர்வு நடனத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசியில் கோலாகலமாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா
தென்காசியில் கோலாகலமாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 11:01 PM IST

தென்காசியில் கோலாகலமாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள ஊர் மேல் அழகியான் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று (செப்.25) நடைபெற்றது. இந்த சடங்கு திருமணமான பெண்கள் கருத்தரித்த நாளிலிருந்து 7-வது மாதத்தில் நடக்ககூடிய வளைகாப்பு நிகழ்ச்சி. இது ஒரு பெண்ணின் தாய் வீட்டில் எவ்வாறு நடைபெறுமோ, அதேபோல வெகு சிறப்பாகவே அரங்கேறியது.

மேலும் இந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களின் தினசரி கர்ப்ப காலத்தை குறித்து, எவ்வாறு கர்ப்ப காலங்களில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எவ்வாறெல்லாம் இருக்கக்கூடாது என்றும் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், குழந்தை பிறந்த பின்பு எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திட்ட பணிக்குழு சார்பாக வளைகாப்பு, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், மலர் மாலைகள் வழங்கப்பட்டன.

கலகலப்பாக நடக்கக் கூடிய சடங்குகளில் ஒன்று வளைகாப்பு என்று கூறுவார்கள். அந்த வகையில் பெண்கள் பங்கேற்கும் இவ்விழாவில், மகப்பேறு அடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மையாகப் போகும் பெண்ணிற்கு வளையல்கள் அணிவதும், தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும். இந்நிகழ்வில் தொடக்கத்தில் பேசிய ஃபர்ஹத் சுல்தானா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகள் குறித்து விழிப்புணர்வுவை வழங்கினார்.

இதில், குழந்தைகள் பிறந்தவுடன் சீம்பால் கொடுப்பதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பது பற்றியும் குழந்தைகளுக்கு ஆறுமாதம் முதல் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கப்பட்டது. தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலை அணிவித்தும், கன்னத்தில் சந்தனம் தடவி, நெற்றியில் குங்குமம் இட்டு அவர்களை வாழ்த்தினர்.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த நவதானிய பொருட்களான கம்பு, மொச்சை, சுண்டல், சோளம், சுண்டை வற்றல், உளுந்தம் பருப்பு, பாசிப்பயறு, கடுகு, பச்சை பட்டாணி, கேப்பை, கோதுமை, கானம், மக்காசோளம் மற்றும் காய்கறி வகைகளான் கத்தரிக்காய், பாகற்காய், சுரைக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், வெண்டைக்காய், எலுமிச்சம் பழம், வாழைப்பூ, பூசணிக்காய், முருங்கைகீரை, பசளைக்கீரை, அகத்திக்கீரையும் வழங்கப்பட்டது.

இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் சுமார் 100 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். மேலும், இங்கு வந்திருந்த பொது மக்கள் அனைவருக்கும் தாம்பூலமாக தேங்காய், வாழைப்பழம், முறுக்கு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாடல் மூலமாக கர்ப்ப காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற நடன நிகழ்ச்சி உடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகர் ஃபர்ஹத் சுல்தானா,
மாவட்ட அலுவலகர் சண்முகசுந்தரம் மற்றும் மேற்பார்வையாளர்கள் என ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க:பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details