தென்காசி அருகே உள்ள ஆயக்குடியைச் சேர்ந்த சிவராமன் என்பவரது மகன் கார்த்திக் (20). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
கார்த்திக் சில மாதங்களாகவே கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் அதிகமாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரின் உறவினரான ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்ற கருத்தப்பாண்டி (37) இதனை நீண்ட நாள்களாக கண்டித்துவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஆயக்குடியிலிருந்து ஊர்மேல் அழகியான் கிராமத்துக்கு செல்லும் குறுக்கு வழிச்சாலையில் கார்த்திக் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கருத்தப்பாண்டி, அரிவாளால் கார்த்திக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து, கை, உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட கார்த்திக், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
பின்னர், கார்த்திக்கின் வீட்டுக்கு சென்ற கருத்தப்பாண்டி, கார்த்திக்கை கொலை செய்துவிட்டதாக கூறிவிட்டு, ஆய்க்குடி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் வேல்கனி உள்ளிட்ட காவலர்கள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கருத்தப்பாண்டியை கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.