நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து வணிக நிறுவன உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாநகரக் காவல் துணை ஆணையர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "நெல்லை அரசு மருத்துவமனையில் 38 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஒருவரைத் தவிர மற்றவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். அதிகம் பாதிப்பிற்கு உள்ளான மேலப்பாளையம் பகுதியில் 34 ஆயிரம் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று களக்காடு பகுதியில் 3 நபர்களுக்கும், பத்தமடையில் 1 நபருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 12 ஆயிரம் வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு நபர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.