பாரம்பரிய உணவு மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்த்துக்கொள்ளலாம் - மாவட்ட ஆட்சியர் - தென்காசி மாவட்ட ஆட்சியர்
தென்காசி: சாதாரண பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தாய்மார்களுக்கு தெரிவித்துள்ளார்.
![பாரம்பரிய உணவு மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்த்துக்கொள்ளலாம் - மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து மாத விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:05:01:1600742101-tn-tki-03-traditional-food-festival-7204942-21092020161739-2109f-1600685259-45.jpg)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெறும் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவில் பாரம்பரிய உணவுத்திருவிழா மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ”தேசிய அளவில் செப்டம்பர் மாதம் முழுவதும் போஸான் அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எதிர்கால சமுதாயத்தை கட்டமைக்க தற்போதுள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும், கீரைகள், முருங்கைக்காய், பப்பாளிக்காய் போன்ற சத்தான உணவு வகைகளை எளிதாக உருவாக்கக்கூடிய வீட்டுத் தோட்டத்தை அமைத்திட அரசு திட்டம் வகுத்துள்ளது.
குழந்தைகளுக்கு காய்கறிகளை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை பெற்றோர்கள் சிறுவயது முதலே பழக்க வேண்டும். காலமுறை காய்கறிகள், பழங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.
குழந்தை கருவுற்றது முதல் இரண்டு வயதுவரை உள்ள 1000 நாள்கள் மிகவும் பொன்னான நேரமாகும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்தான உணவு, பாரம்பரிய உணவுகளை கொடுப்பதன் மூலம் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல் வளர்ச்சி மற்றும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய நிலை ஏற்படும்.
குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சத்தான மாவு வகைகள் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. அதனை மேலும் குழந்தைகளுக்கு கண் கவரும் விதமாக மாற்றி குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்த உணவுத்திருவிழா வழிவகை செய்யும்.
குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான பாரம்பரிய உணவு வகைகளை வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.