தென்காசி:2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான வாக்குகளில் குளறுபடி இருப்பதாக கூறி மீண்டும் வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 2021 தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி, அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''தேர்தலில் பதிவான வாக்குகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்குகள் இரண்டிற்குமான எண்ணிக்கைக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஆகையால், தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தபால் வாக்குகளில் குளறுபடி உள்ளதாகக் கூறி மீண்டும் வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.