தென்காசி: குற்றாலத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டம், குழுவின் மாநிலப் பொதுக்குழு கூட்டத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பல விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ’தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும்.
கனிம வள கொள்ளையையும், கனிம வளங்களையும் வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட 61 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன் கூறுகையில், ”தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வளங்கள் சூறையாடப்படுவதாலும், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமலும் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கிராமங்களுக்கும், விளை நிலங்களுக்கு வருகின்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.