தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பட்டியலினத்தைச் சேர்ந்த வேறுபிரிவினரான செல்லையா (65) என்ற முதியவர் தனது வீட்டு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதால் இருவேறு சமூகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த குருவிகுளம் காவல் துறையினர் இருபிரிவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதன் பின்னர் உயிரிழந்தவரின் உடலை அந்த வழியாக அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இது போன்று இனி நடக்க கூடாது என காவல் துறையினர் எச்சரித்ததாகவும், இருபிரிவினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இதுகுறித்து வழக்குப் பதிவு எதுவும் இதுவரை செய்யவில்லை என தெரிகிறது.