தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் அதிரடி வாகன சோதனை; இரண்டு நாட்களில் 2,781 பேர் மீது வழக்குப் பதிவு!

Tenkasi Traffic police: தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர், 71 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

2 நாட்களில் 2,781 பேர் மீது வழக்குப்பதிவு..71 வாகனங்களை பறிமுதல்!
தென்காசியில் அதிரடி வாகன சோதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 12:34 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் இளைஞர்கள் சிலர், விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக இயக்குவதாலும், அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பக் கூடிய வாகனங்களை பயன்படுத்துவதாலும், பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்ற டி.கே.சுரேஷ் குமார் கவனத்திற்கு புகார்கள் சென்ற நிலையில், இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:"எந்தவொரு வன்முறையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸரை பொருத்தி இயக்கி வந்த நபர்கள், அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்கி வந்த நபர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இயக்கி வந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவர்களை குறி வைத்து போலீசார் சோதனை மேற்கொண்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களில் தென்காசியில் போக்குவரத்து காவலர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர வாகனத் தணிக்கையில், சாலை விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை இயக்கி வந்த 2,781 பேர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 71 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் புகைபோக்கிகளை பயன்படுத்துதல், பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஹாரன்கள் பயன்படுத்துதல், வாகன விதிமுறைகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளில ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ராஜராஜ சோழன் 1038வது சதய விழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details