தென்காசி :தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக குற்றாலம் அருவிகள் திகழ்கின்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல்வேறு மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் நடுவே வந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய அருவிகளில் குளித்தாலே தனி உற்சாகம் ஏற்படும் அளவுக்கு, உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதுக்கு நிம்மதியையும் வழங்கும் நீர் வீழ்ச்சிகளாக கருதப்பட்டு வருகின்றன.
இதனால் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழை நேரத்தில் இங்கு சீசன் களைகட்டும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுத்து வருவார்கள்.
இதையும் படிங்க :Himachal flood: மழையின் சீற்றத்தால் அடித்துச்செல்லப்பட்ட நூற்றாண்டு பழமைமிக்க பாலம்!
இந்நிலையில் சீசன் தாமதமாகத் துவங்கிய நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு, குற்றால அருவிகள் மட்டுமல்லாமல் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கக்கூடிய படகு சவாரியும் இன்று(ஜூலை 10) துவங்கப்பட்டது.