தென்காசி: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 -வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில், பிரித்தானிய அரசை எதிர்த்த இந்தியத் தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலை சிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை, அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
இந்த விழா பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் உள்ள பகுதியில், சிங்கப்பெண்கள் இரத்ததான கழகம், தென்காசி அரசு தமைமை மருத்துவமனை, ப்ரோ விஷன் கண் மற்றும் விழித்திரை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான மற்றும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் பங்கேற்ற வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தனுக்கு, ஊர் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர், இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார்.