உமாரதி செய்தியாளர்கள் சந்திப்பு தென்காசி:பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் விதமாக அக்கட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் (ஜூன் 12) தென்காசி மாவட்ட பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமாரதி பேசியதாவது, "மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட முத்ரா கடன் வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜுவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் மக்கள் பெற்று உள்ள பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசு செய்து வரும் ஊழல் குறித்து தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பான அரசியல் செய்து வருகிறார். இதன் காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்குப் பிறகு தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி நல்லதொரு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்றே கூறலாம்.
மேலும், மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுவது இல்லை. நாட்டு மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசியல் லாபத்திற்காக அந்தந்த மாநில அரசுகள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும், தமிழ் தமிழ் என்று கூறி வரும் தமிழக அரசு, தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை தமிழக முதல்வரால் கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். தமிழகத்திலிருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தமிழக மக்கள் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டு காலத்தில் யாரும் பிரதமராகவில்லை என அமித்ஷா கூறி உள்ளார். ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர் வரும் 2024 இல் பிரதமராக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உமாரதி, அதை அமித்ஷா தான் சொல்ல வேண்டும்" என்று மழுப்பலாக பதில் அளித்தார்.
இதையும் படிங்க:அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை; கூட்டணி குறித்து முடிவெடுக்க நேரிடும்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வார்னிங்!