தென்காசி: குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்கள் பருவ காலங்கள் ஆகும். இந்த காலங்களில் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டும். இங்கு பெய்யும் சாரல் மழையினையும், தென்றல் காற்றையும் அனுபவிக்க நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து குற்றாலத்திலுள்ள பேரருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், பழைய குற்றால அருவியில் மட்டும் இரவு நேரத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
பழைய குற்றால அருவியில் இரவு நேரங்களிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்- வியாபாரிகள் கோரிக்கை. இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாகவே தொடங்கியது. இரவு நேரத்தில் குளிக்க அனுமதி அளிக்காதது வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பழைய குற்றால அருவியை நம்பி ஆயிரப்பேரி, புல்லுக் காட்டுவலசை, அங்கராயன்குளம், உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வந்தனர்.
ஏற்கனவே கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள் தற்போது தான் மீண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆயிரபேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் கார் பார்கிங் ஏலம் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு இதுவரை ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. பழைய குற்றால அருவயில் இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழைய குற்றாலத்தை நம்பி வாழும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தேனி - பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 2,58,000 அபராதம்