தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வீர்சிங் மீதான புகார்களை வாபஸ் பெறும்படி எஸ்.பி. மிரட்டினாரா? - வக்கீல் கைதின் பின்னணி என்ன? - வழக்கறிஞர் மகாராஜன் கைது விவகாரம்

நெல்லையில் பல்வீர்சிங் பல் பிடுங்கிய விவகாரம் மீதான புகார்களை வாபஸ் பெறும்படி எஸ்.பி. வழக்கறிஞர் மகாராஜனை மிரட்டியதாகவும்; இல்லையெனில் கைது செய்வதாக கூறியதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டதன் பின்னணி
Etv Bharat வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டதன் பின்னணி

By

Published : May 10, 2023, 7:04 PM IST

வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டதன் பின்னணி

தென்காசி: பாவூர்சத்திரம் அருகேவுள்ள மேலப்பாவூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினரிடையே கொடிக்கம்பம் அமைப்பதில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருந்தது. ஒரு சமூகத்திற்குச் சொந்தமான இடத்தில் இன்னொரு சமூகத்தினர் கம்பம் நட்டு கொடியேற்றியதால், இன்னொரு சமூகத்தனரின் போஸ்டர் மீது அவமரியாதை செய்ததாக மற்றொரு சமூகத்தவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இருதரப்பிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்ததால் அந்தக் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே திருநெல்வேலியைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சேனைப்படை அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் நான்கு பேர் மேலப்பாவூர் ஊருக்குள் செல்ல முயன்றனர். அங்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக மகாராஜன் பேச சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், கிராமத்தின் நுழைவுப் பகுதிகளில் அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் 'நீங்கள் ஊருக்குள் சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதால் உள்ளே செல்லக்கூடாது’ எனத் தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி செல்ல முயன்றதால் மகாராஜன் உள்பட ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சேனைப்படைத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் நான்கு பேர் தென்காசி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன் பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில் காவல் துறையினர் திட்டமிட்டு தான் வழக்கறிஞர் மகாராஜனை கைது செய்துள்ளதாக சுபாஷ் சேனை அமைப்பினர் குற்றம்சாட்டி ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய பல் பிடுங்கிய விவகாரத்தை வழக்கறிஞர் மகாராஜன் தான் முதன்முதலாக வெளிக்கொண்டு வந்தார். ஏற்கனவே சிவந்திபட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரணம் உட்பட காவல் துறையினருக்கு எதிரானப் பல்வேறு விஷயங்களை மகாராஜன் முன்னெடுத்து வருகிறார்.

எனவே, ஏஎஸ்பி விவகாரத்தில் நெல்லை மாவட்ட காவல் துறையினர் மகாராஜன் மீது கடும்கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஏதாவது வழக்கில் சிக்குவாரா என்று அவரை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்தில் நெல்லை - வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மகாராஜன் பேசும்போது காவல் துறையினரை வெளிப்படையாக மிக கொச்சையாக திட்டியதாக தெரிகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் 143, 153A ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள மகாராஜனை திருச்சி சிறைக்கு மாற்றினர். இந்த நிலையில் மகாராஜன் கைது செய்யப்பட்டபோது தென்காசி மாவட்ட எஸ்.பி. சாம்சன் அவரிடம் நேரடியாகச் சென்று ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான புகார்களை வாபஸ் பெற வேண்டும் எனவும்; இல்லாவிட்டால் கைது செய்துவிடுவோம் எனவும் மிரட்டியதாக சமூக நீதி கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மகாராஜன் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர். இது குறித்து தெரிந்து கொள்வதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் தொலைபேசியினை எடுக்கவில்லை. இதற்கிடையில் மகாராஜனுக்கு ஜாமீன் வழங்கி தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, அவர் இன்று ( மே 10 ) இரவுக்குள் திருச்சி சிறையில் விடுதலை ஆவார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:Gujarat Bus Accident : பேருந்து மோதி 10 பேர் பலி - காத்திருந்த பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details